திங்கள், 10 ஏப்ரல், 2017

நீர் வளத்தை பெருக்கும் பனைமரங்கள்

அன்றைய  காலகட்டத்தில் நமது முன்னோர்கள் மக்களுக்கு  பயன்தரும் வகையில் அவர்களது ஒவ்வொரு செயல்பாடும் இருந்தது. ஆனால் இன்று நாம் அதை புறக்கணித்து அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
நமது முன்னோர்கள் வயல் வெளிகளின் ஓரங்களில் பனை மரங்களை நட்டு வைத்ததன் காரணம் தெரியுமா? பெரும்பாலும் பனைமரங்கள் வறட்சியான பகுதிகளில் காணப்படுவதால் நாம் அதை வறட்சி தாவரமாக நினைக்கிறோம்.
ஆனால் பனைமரங்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தாவரம் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
 இந்தியாவில் 10.2 கோடி பனைமரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடி பனைமரங்கள் உள்ளன. இதில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் நெருக்கமாக காணப்படுகின்றன. சேலம், சென்னை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்றன.
நமது முன்னோர்கள் மக்கள் வாழும் பகுதிகளில் நீராதாரத்திற்காக குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் போன்றவகளை வெட்டினர். குளங்கள் வெட்டுவதால் மட்டும் நீர்மட்டம் உயர்ந்துவிடாது.
நிலத்தடி நீர்மட்டம் உயர சில தாவரங்களும் உதவி புரிகின்றன. அத்தகைய மரங்களில் பனைமரமும் ஒன்று. நீர்மட்டத்திற்கு உதவுவதால் குளக்கரைகளில் பனைமரங்களை நட்டு வைத்தனர்.
பொதுவாக எல்லா தாவரங்களின் வேர்களும் பக்கவாட்டில் தான் வளரும். ஆனால் பனைமரம் அவற்றில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. பனைமரத்தின் வேர்கள் செங்குத்தாக வளர்ந்து நிலத்தடி நீர்மட்டத்தை தேடி செல்லும் தன்மையுடையது.
பனைமரத்தின் வேர்கள் அவ்வாறு போர்வெல் போடுவது போன்று செங்குத்தாக கீழ் நோக்கி வளர்ந்து தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்பாதைக்கு கொண்டு வரும்.
இதனால் பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீரை மேல்பகுதிக்கு கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்வழிப்பாதையில் நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் கலக்கும்.
மேலும் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட செய்கிறது பனைமரங்கள். மேலும் பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, கருப்பட்டி, பதனி போன்றவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

1 கருத்துகள்: